தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சிறுபான்மை மக்களை திமுக தந்திரமாக ஏமாற்றி வருகிறது" - எடப்பாடி பழனிசாமி சாடல்! - மு க ஸ்டாலின்

EPS speech: தமிழகத்தில் திமுக அரசு 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் எனவும், திமுக திராவிட மாடல் அரசு அல்ல, தந்திர மாடல் அரசு எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

EPS speech
எடப்பாடி பழனிச்சாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 7:58 AM IST

கோயம்புத்தூர்:கருமத்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் விழா பேருரையாற்றிய அவர் ஒரு குட்டி கதை சொல்லி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் உழைப்பால் மற்றவர்கள் வாழவும், மற்றவர் முதுகில் ஏறி சவாரி செய்யவும் பலர் நினைக்கின்றனர். பொய் வாக்குறுதிகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அளித்து கொல்லைப்புற வழியாக திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும், அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தியதால், தொழில் முனைவோர் தொழில் நடத்த முடியாத நிலை உள்ளது.

அத்தியாவசிய, கட்டுமானப் பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளன. விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்வை ஓட்ட முடியாமல் தவிக்கின்றனர். விடியா திமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு பச்சைத் துண்டை தலையில் கட்டிக் கொண்டு, விவசாயி என்ற ஸ்டாலின் தோட்டத்துக்கு எல்லாம் போராட்டம் நடத்தினார்.

தற்போது செய்யூரில் அறவழியில் போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கொடுங்கோல் முதலமைச்சராக மாறிவிட்டார். சிறுபான்மை மக்களை திமுக தந்திரமாக ஏமாற்றி வருகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில் திமுகவினர் என்ன நன்மை செய்துள்ளார் என்பதை கிறிஸ்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெருசேலம் புனித பயணம் செல்ல அதிமுக அரசு நிதியுதவி செய்தது. மானியத் தொகையை உயர்த்தி வழங்கியது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு கிறிஸ்தவர் கூட ஜெருசேலம் புனித பயணம் செல்லவில்லை. திமுக ஆட்சியில் அரசு மானியம் பெறும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பணி நியமனங்கள் செய்ய முடியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக கூறிய வாக்குறுதியை, திமுக அரசு நிறைவேற்றவில்லை. கடந்த காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. பாஜக அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை பாஜக கொள்கைகள் திமுகவிற்கு தெரியாதா? பதவி சுகம் வேண்டுமென கொள்கையை காற்றில் பறக்க விட்டார்கள். பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை மக்கள் மறந்து விடுவார்கள் என பசுந்தோல் போர்த்திய புலியாக சிறுபான்மை மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். சிறுபான்மையின மக்கள் தற்போது விழித்துக் கொண்டார்கள். இனி பிழைத்துக் கொள்வார்கள்.

அதிமுக மதம், சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் சமமாக மதிக்கும் கட்சி. 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பச்சை பொய் சொல்கிறார். ஏதோ ஒரு சில அறிவிப்புகளை மட்டும் நிறைவேற்றியுள்ளார். எந்த நகரப் பேருந்துகளில் ஏறினாலும், பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் என வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது பிங்க் நிற பெயிண்ட் அடித்த பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் என்கிறார்கள்.

நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் ஒரு விண்ணப்பதைப் பூர்த்தி செய்யச் சொல்கிறார்கள். இது ஏழைகளுக்காக கொண்டு வந்த திட்டமா? சாதிக்காக கொண்டு வந்த திட்டமா? இதுதான் திராவிட மாடல். டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், எதிர்கட்சித் தலைவராக உள்ள என்னை கோயபல்சை மிஞ்சிய ஆள் என சுகாதாரத் துறை அமைச்சர் சொல்கிறார்.

மக்கள் படும் துன்பத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதுதான் எதிர்கட்சியின் நோக்கம். மக்களைப் பற்றி கவலையில்லாமல் மராத்தான் ஓட்டம் மட்டுமே சுகாதாரத் துறை அமைச்சரின் வேலையாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு போக மக்கள் பயப்படுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு கால், கைகளோடு செல்பவர்கள் கால், கை இல்லாமல் வருகிறார்கள்.

திராவிட மாடல் அரசு அல்ல, தந்திர மாடல் அரசு. கச்சத்தீவு உரிமை இழக்க காரணம் திமுக அரசுதான் என்பதை காலம் மறக்காது. மீன் பிடிக்கும் உரிமை, ஆலய வழிபாடு உரிமை பறிக்கப்பட்டதால் மீனவர்களும், கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியும் கிறிஸ்தவ மக்கள் ஏமாறாமல் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். தந்திர மாடல் திமுகவினர், பொய்யை உண்மை போல பேசி தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் திறமைசாலிகள்.

சிறுபான்மை மக்களின் கேடயமாகவும், பாதுகாப்பு அரணாகவும் அதிமுக என்றென்றும் இருக்கும். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்கள் நலனில் முதன்மையான இயக்கம். 2026-இல் அதிமுக ஆட்சி அமைக்கும். அதற்கு அச்சாணியாக நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல கிறிஸ்தவர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும். உங்களது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோட் அருகே கால்நடை திருட்டுச் சம்பவத்தில் திருப்பம்.. சாதிய வன்கொடுமை அரங்கேறியதாக குற்றச்சாட்டு - போலீசார் தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details