கோயம்புத்தூர்:சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கூட்டணி கட்சித்ஜ் தலைவர்கள், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி.
திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமருக்கு வாழ்த்துக்கள். இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. பணமழை பொழிந்துள்ளது. 22 மாதமாக சம்பாதித்த பணத்தை வைத்து தண்ணீர்போல் பணத்தை வாரி இறைத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
120 இடங்களில் வாக்காளர்களை டெண்ட் அமைத்து, பட்டியில் அடைத்து பணத்தை கொடுத்து, பல்வேறு பரிசு பொருள் கொடுத்து வெள்ளி கொலுசு, வாட்ச், குக்கர் ஆகியவற்றை வழங்கி வாக்காளர் வீடுகளுக்கு கோழிக்கறி கொடுத்து, மளிகை பொருட்கள் கொடுப்பதாக டோக்கன் வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் புகார் செய்தோம். ஆனால், தேர்தல் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு, முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயகப்படி நின்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.