கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணையில் இருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் நவமலைக்கு வந்து சேர்கிறது. மேலும், மின் உற்பத்திக்குப் பின் ஆழியாறு அணைக்குச் செல்கிறது. நவமலையில் மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டபோது அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அந்தக் குடியிருப்புகள் இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இந்தக் குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் 300 மீட்டர் தொலைவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆற்றின் கரையோரம் வசித்து வருவதால் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது. தெரு விளக்குகள் ரிப்பேர் ஆனால், என்றாவது ஒரு நாள்தான் சரி செய்யப்படும்.
ஆற்றோரக் கழிப்பிடம், மருத்துவ வசதி இல்லாத அவல நிலை நீடிக்கிறது. நவமலை வாழ் பகுதி பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது கிடையாது. வற்றாத நவமலை ஆற்றின் நீர்தான் ஆதாரமாக இருந்து வருகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வேலை என்பது கிடையாது; கிடைக்கும் வேலையை வைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
குடிக்க மட்டும் தண்ணீர் இணைப்பு வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசுக்கு பலமுறை மனு அளித்தும் இன்று வரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வீடுகள் இல்லாத சூழ்நிலையி்ல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, யானைகள் இவர்கள் வசிக்கும் இடத்தில் புகுந்து குடிசைகளை இடித்து தள்ளுவது வழக்கமாகி வருகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு மலைவாழ் மக்கள் நலன் கருதி வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சரை நேரில் சந்தித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்!