கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் நேற்றிரவு (அக்.30) அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சொகுசு ஜீப் ஒன்று இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்து விட்டு, அந்த காரை விரட்டி சென்று நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மடக்கிப்பிடித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாகனத்தை ஓட்டிவந்தவர் கொண்டே கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பதும், மருத்துவரான இவர் பொள்ளாச்சியில் மருத்துவமனை நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும், அவர் குடிபோதையில் இருந்ததால், விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மருத்துவரை கைது செய்ததோடு அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.