அமைச்சரின் வருகைக்காக அதிமுக, பாஜக விளம்பரங்களை அழிக்க திமுகவினர் முயற்சித்ததால் போலீசாருடன் வாக்குவாதம் கோயம்புத்தூர்:சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் வருகிற 12ஆம் தேதி வருகிறது. அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வருகிற ஜூன் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு இருவரின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில், அதிமுக மற்றும் பாஜகவினர் வாழ்த்து விளம்பரங்கள் செய்திருந்தனர். அதேநேரம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (மே 8) பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பொள்ளாச்சி வர உள்ளார்.
ஆனால், பொள்ளாச்சி நகர் எல்லையில் நுழைந்தது முதல் காந்தி சிலை வரை உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மற்றும் பாஜகவினரின் விளம்பரங்கள் இருப்பதால், அந்த வாழ்த்து விளம்பரங்களை அழிக்க திமுகவினர் முயற்சி செய்துள்ளனர்.
இதன்படி, நகராட்சி தூய்மைப் பணியாளர்களை வைத்து சுண்ணாம்பு அடித்து மறைக்கும் வேலையில் திமுக நகர் மன்றத் தலைவர் சியாமளா மற்றும் அவரது கணவரும், நகரச் செயலாளருமான நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அதிமுக மற்றும் பாஜகவினர் ஏராளமானோர் கூடி, சுவர் விளம்பரங்களை அழிக்க முயற்சித்த நகராட்சி தூய்மைப் பணியாளர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களைத் திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து இரு கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இரு கட்சி நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆளும் திமுகவினரின் அராஜகங்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்களை அழிக்க முயற்சித்தால் அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்தி தீர்வு காணலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறியதை அடுத்து, இரு கட்சியினரும் சாலை மறியல் முயற்சியைக் கைவிட்டனர். மேலும், இரவு முழுவதும் இரு கட்சிகளின் தொண்டர்களும், மீண்டும் சுவர் விளம்பரங்களை அழிக்காதபடி பாதுகாக்க விடிய விடிய காவல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி - கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், போஸ்டர்கள் ஒட்டுவதிலும், பேனர்கள் வைப்பதிலும் அடிக்கடி கட்சியினர் இடையே வாக்குவாதங்களும், மோதலும் நீடித்து வருவது பொதுமக்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:''இனி எங்கள் சிங்கத்தின் கர்ஜனையே'' ஓபிஎஸ்ஸை கேலி செய்யும் வகையில் ஈபிஎஸ் தரப்பினர் ஒட்டிய போஸ்டர்!