கோயம்புத்தூர்:கோவை ஆர்.எஸ்.புரத்தில் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் செல்வராஜ், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமலாக்கத் துறை கடந்த 9 ஆண்டுகளில் 3117 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 27 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது. பா.ஜ.க தங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்க அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இருக்கும் எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு இருக்கின்றார். இதனால் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற முடியாது என்பதால் தான் இப்போது செந்தில் பாலாஜியை கைது செய்து நெருக்கடி கொடுக்கின்றனர். இதை எதிர்கொள்ள திமுக அரசும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் தயாராகவே இருக்கின்றனர்.
இந்திய அரசியலமைப்பு படி செயல் படாமல், அதிகாரத்தை மீறி செயல்படுவதால் தமிழக ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எல்லாவற்றிக்கும் பதில் சொல்ல சிபிஐ அதிகாரியா? அமலாக்கத் துறை அதிகாரியா?
சிபிஐ, அமலாக்கத் துறை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. அண்ணாமலை தனது வீட்டு வாடகை செலவிற்கு என நண்பர்களிடம் மாதம் 9 லட்சம் ரூபாய் வாங்கி வருகின்றார். இதுவே இரண்டு ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதை அமலாக்கத் துறை விசாரிக்காதா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
பணம் கொடுத்ததற்கும், பணம் வாங்கியதற்கும் வருமான வரியை அண்ணாமலையும், பணம் வாங்கியவரும் கொடுத்துள்ளனரா என்பதை மத்திய அரசும் தெளிவு படுத்த வேண்டும் எனவும், அமலாக்க துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், ஆருத்ரா நிதி நிறுவன வழக்கில் இருப்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் பா.ஜ.கவில் கட்சி பதவி கொடுத்ததாக, கைதானவர்கள் சொல்லி இருக்கின்றனர்.
இதற்கு பா.ஜ.க தலைமையும், அண்ணாமலையும் எந்த பதிலும் சொல்ல வில்லை எனவும் தெரிவித்தார். குற்ற பின்னணி கொண்டவர்களை பா.ஜ.கவில் சேர்த்து இருக்கும் நிலையில், அவர்களுக்கு திமுகவை பேச தகுதி இல்லை எனவும் தெரிவித்தார். “அதிமுக கட்சி மறைந்த தலைவர் ஜெயலலிதாவை, ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என இழிவு படுத்தியவர்களுடன் இன்னும் அதிமுக கூட்டணியில் இருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் வீடுகளில் சோதனை நடத்தி குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. கஞ்சா, குட்கா விற்பவர்களிடம் பணம் வாங்கி கொண்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபியும் விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர். விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் இருந்து 83 கோடி ரூபாய் எடுக்கபட்டது.