தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம்: காவல் துறையுடன்‌ மோதலில் ஈடுபட்ட திமுக!

கோயம்புத்தூர்: கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது காவலர் ஒருவர் திமுகவைச் சேர்ந்த ஒருவரை தள்ளிவிட்டதாகக்கூறி, திமுகவினர் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

DMK Protest against anna university vice chancellor in covai
DMK Protest against anna university vice chancellor in covai

By

Published : Oct 15, 2020, 12:49 PM IST

கோவையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு, சிறப்பு தற்செயல் விடுப்புகள் போன்றவற்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த விடுப்புகளை தடை செய்யும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பியது.

இதனைக் கண்டித்தும் கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று(அக்.14) பல்கலைக்கழக வளாகத்தினுள் கறுப்புக் கொடி அணிந்து அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்தொடர்ச்சியாக கோவையில் திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கோவை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியின் முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவைக் கண்டித்தும் அந்த கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது எனவும்; அவற்றை மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இயக்க வேண்டும் என்றும்; பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பதவி விலகிட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் அவர்கள் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை முற்றுகையிட முயன்றதால், காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல் துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

காவல் துறை அலுவலர் ஒருவர் திமுகவைச் சேர்ந்தவரை தள்ளி விட்டதாகக் கூறி, திமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details