பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பூச்சி கொட்டாம்பாறை எனும் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் 36 வனக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்த வனக்கிராமங்களில் ஒன்றான பூச்சி கொட்டாம்பாறை, காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அடா்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு பழங்குடி இனத்தைச் சாா்ந்த முதுவா் இன மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த வனக்கிராமத்தில் வாழும் செல்லமுத்து என்பவரது மகள் ஸ்ரீதேவி. பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், கேரளா மாநிலம் சாலக்குடியில் விடுதியில் தங்கி படித்து வந்தாா். இவர் வசித்த பூச்சி கொட்டாம்பாறை யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்து காணப்படும் வனப் பகுதியாகும். இங்கு போக்குவரத்து வசதிகளும் இல்லை.
எனவே, ஸ்ரீதேவி ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் வந்து, தனது பெற்றோரை பாா்த்துவிட்டுச் செல்வாா். தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டு பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கேரளா மாநிலத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடனும் மாணவா்கள் 10ஆம் வகுப்புத் தேர்வினை எழுதிமுடித்தனா்.
முன்னதாக ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் இருந்து சாலக்குடி சென்று தேர்வு எழுதுவதில் பெரும் சிக்கல் நீடித்த நிலையில், மாணவியின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்ட கேரள அரசு ஸ்ரீதேவி தமிழ்நாட்டிலிருந்து வந்து தோ்வு எழுதுவதற்குத் தேவையான சிறப்பு அனுமதி கடிதம் வழங்கியதோடு, ஆம்புலன்ஸையும் ஏற்பாடு செய்து, அதில் மாணவியை அழைத்துச்சென்று தோ்வு எழுதவைத்தனா். அதன் பயனாக 10ஆம் வகுப்புத் தோ்வில் ஸ்ரீதேவி A+ கிரேடு பெற்று தன் கிராமத்துக்கே சிறப்பு சோ்த்துள்ளாா்.