தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி குடும்பத்திற்கு அடிமை சாசனம் - திமுகவினரை விளாசும் எடப்பாடி பழனிசாமி!

திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது. தற்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி உள்ளனர். அவருக்கு பின்னர் இன்பநிதியுடனும் அமைச்சர்களாக இருப்போம் என திமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனர் என ஈபிஎஸ் விமர்சனம் செய்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 5, 2023, 12:22 PM IST

திமுகவினர் கருணாநிதி குடும்பத்திற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனர்… ஈபிஎஸ் விமர்சனம்

கோவை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கோவை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவன மண்டபத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா இறந்த பின்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளோம். என்னை பொதுச் செயலாளராக ஏக மனதாக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் ஆக முடியும் .

திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது, தற்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி உள்ளனர். அவருக்கு பின்னர் இன்பநிதியுடனும் அமைச்சர்களாக இருப்போம் என திமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனர் என விமர்சனம் செய்தார். சாதாரண தொண்டனை மதிக்க கூடிய கட்சி அதிமுக. ஆனால் திமுக ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகின்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர்கள் என தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளை நெருங்கிவிட்ட நிலையில், திமுக அரசு மக்கள் விரோதத்தை சம்பாதித்து கொண்டு எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஊழலிலே ஊறிப்போன திமுக அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்வது கண்டனத்திற்குரியது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.

திறமையற்ற, பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கின்றார். அதிமுகவினர் மீது வழக்கு போடுவதை தவிர ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். கோவைக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் குறித்து விரிவான திட்ட அறிக்கை மேற்கொண்டு பணிகளை துவங்கும் நேரத்தில் தேர்தல் வந்துவிட்டது. இப்போது மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தது போல பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்.

கோவைக்கு அதிமுக தான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களின் தலையில் சுமையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது எனவும், கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார்.

கோவையில் இருப்பவர் பினாமி அமைச்சர், ஓரே ஐந்தாண்டில் இரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எனக் கூறிய ஈபிஎஸ், கொள்ளையடித்த பணத்தை வைத்து அவர் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கின்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். இப்போது இருந்தே தேர்தல் பணியை துவங்க வேண்டும். அதிமுக மட்டுமே மக்களுக்காக வேலை செய்யும் கட்சி எனவும், எந்த தேர்தல் வந்தாலும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்” எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏப்.8-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details