கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதிவரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள். இந்த ஊரடங்கு காலத்தில் இவர்கள் வாழ்வாதரம் பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணம் ரூ. 1000 வெறும் ஓரிரு நாள்களிலேயே செலவடைந்த நிலையில், பட்டினியோடு வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் உதவி கோரினால், நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை சுட்டிக்காட்டி, திமுகவினரிடம் போய் கேளுங்கள் என ஏளனமாக பதிலளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இப்பகுதி மக்கள் பொள்ளாச்சி - திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இவர்களின் பிரச்னை குறித்து பொள்ளாச்சி வட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என சிவக்குமார் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.