கோயம்புத்தூர்: கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சுமார் 100 விழுக்காடு அளவிற்கு விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணம் எனத் தொழில் துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மூலப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி இன்று (டிசம்பர் 20) ஒரு நாள் கதவடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குறுந்தொழில் முனைவோருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலனியில் மூலப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூலப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஒரு நாள் கதவடைப்புப் போராட்டம்
விலையைக் கட்டுப்படுத்துக
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், "மூலப்பொருள்களின் விலை உயர்வால் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பெரு நிறுவனங்களுக்கும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் குறுந்தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் பெரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், பெரு நிறுவனங்களின் 10.5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.
மூலப்பொருள் விலை உயர்வு காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டதால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மூலப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கிற்குத் தயாராகிவரும் மகனுக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற மாதவன்!