தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கோயம்புத்தூர் மாவட்டம் கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 3ஆம் தேதி வெங்கிட்டாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 31 வயது கர்ப்பிணி ஆகியோர் கரோனா பாதிப்பினால் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு, கடந்த 9 ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. நேற்று வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொன்றாக குறைந்தது.
இன்று காலை அப்பெண் குணமடைந்து வீடு திரும்பினார். இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம், கரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக மாறியுள்ளது. கோயம்புத்தூரில் 146 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 145 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதில், கோவையைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் உயிரிழந்தார்.