தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்கூட்டி ஓட்டிய காதலி - செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலன் - கோவை குற்றச் செய்திகள்

கோவையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்து 5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது
நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது

By

Published : May 2, 2022, 10:54 PM IST

Updated : May 3, 2022, 10:42 AM IST

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி காளியம்மாள். காளியம்மாள் கடந்த 28ஆம் தேதி நரசிபுரம் சாலையிலுள்ள தீயணைப்பு நிலையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டி வர, பின்னால் இளைஞர் ஒருவர் அமர்ந்து வந்துள்ளார். மூதாட்டியிடம் வந்த அந்த காதல் ஜோடி முகவரி கேட்பது போல் நடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி காளியம்மாள் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், காளியம்மாளின் தங்கச் செயினை பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர். வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரான சோமையம்பாளையத்தைச் சார்ந்த பிரசாத் (20) மற்றும் சுங்கம் பகுதியைச் சார்ந்த இளம் பெண் தேஜஸ்வினி (20) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருவரும் பேரூர் பச்சாபாளையம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வருவதும், காதலர்களான இருவரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் என்பதும், உல்லாசமாக காதலியுடன் ஊர் சுற்ற சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும், நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்தபோது தங்களது மகன் பிரசாத் தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர் புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோல ஆன்லைன் மூலம் பந்தயத்தில் ஏராளமான பணத்தை பிரசாத் இழந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்ட முடிவு செய்து, இதற்கு உடந்தையாக காதலியை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் தங்கச் செயினை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது!

Last Updated : May 3, 2022, 10:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details