தமிழ்நாடு அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கோவை மாவட்டத்திற்கு முதல்கட்டமாக இரண்டாயிரம் ரேபிட் கிட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக்கொண்டு மாவட்டத்திலுள்ள சிவப்பு குறியீட்டுப் பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட ஐந்து பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார். இதுவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 11 கோடி ரூபாய் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 127 பேருக்கு கரோனா தொற்றிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், கடந்த நான்கு நாள்களில் இரண்டாயிரத்து 75 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மாவட்டத்தில் ஏற்கனவே, ஏழு கருவிகள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது கோவை மாவட்டத்திற்கு இரண்டாயிரம் ரேபிட் கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொன்ன அவர், வரும் மே மாதம் மூன்றாம் தேதிக்குள் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வரும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வைரஸ் பரவலை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைத்துள்ளது - மத்திய அமைச்சர் பாராட்டு