உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன, இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் விமானம் மூலம் கோயம்புத்தூர் வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் எனக் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்திருந்தார், அதன்படி கருமத்தம்பட்டி பகுதியிலுள்ள தேஜா சக்தி மகளிர் பொறியியல் கல்லூரியில் உள்ள விடுதி 100 படுக்கை வசதியுடன் கூடிய கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
விமானம் மூலம் வெளிநாடுகளிலிருந்து கோயம்புத்தூர் வரும் பயணிகள் 15 நாள்கள் மையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் எனவும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனை (இ.எஸ்.ஐ.), அரசு மருத்துவமனைக்கு மாற்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் கிட்டாம்பாளையம் ஊராட்சி ஊழியர்கள் கல்லூரி விடுதியை சுத்தம் செய்துவருகின்றனர். இன்று மாலைக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெறும் எனக் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் மருத்துவருக்கு கொரோனா...