கோயம்புத்தூர்: ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் இந்தியாவிலே முதன்முறையாகப் புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்போகிராபிக் இணைய வழி புத்தகத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணா, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது ஒரு புறம் இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. புகையிலை எந்த வடிவிலிருந்தாலும் ஆபத்துதான்.
இதுவரை கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் கிலோ வரையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு என்பது மக்கள் மனதில் அதிகம் பதிகிறது. ஆனால் புகையிலை பிடிப்பவர்கள் மத்தியில் தாக்கதை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் புகையிலை புழக்கம் உள்ளது என்பது வேதனைக்குரியது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒரு ஓவியமாக அல்லது கார்ட்டூனாக கொண்டு வந்தால், அது விரைவில் பள்ளி மாணவர்களை சென்றடையும்.