கோவை மாவட்டம் சரவணம்பட்டி, சுங்கம், துடியலூர், சுந்தராபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையின்போது அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் சமீப காலத்தில் எழுந்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில் மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவதற்காக வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் அடங்கிய குழுவை கோவை மாவட்ட ஆட்சியர் நியமித்தார்.
முதலாவதாக சரவணம்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் அக்குழுவினர் விசாரணை மேற்கொண்டபோது மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறப்பட்டது.
இதனால் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்துசெய்து அப்போது சிகிச்சையில் இருந்த நோயாளிகளைத் தவிர இதர நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது என்று தடைவிதித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, துடியலூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையிலும் ஆய்வுமேற்கொண்டு புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் அனுமதிக்கக் கூடாது என்று தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சுங்கம், சுந்தராபுரம் ஆகிய இரு பகுதிகளிலும் புகார் எழுந்த மருத்துவமனைகளில் ஆய்வுமேற்கொண்ட விசாரணைக் குழுவினர் அதற்கான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். இரு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்துசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுங்கம் பகுதியில் விசாரணைக் குழுவினர் ஆய்வுமேற்கொண்ட மருத்துவமனையில் அதிகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.