கோயம்புத்தூர் மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக 24 மணி நேரமும் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி காவல் ஆய்வாளர் திலக் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை) குழுவினர் பெரிய தடாகம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பதற்றத்துடனும் முன்னுக்குப் பின் முரணாகவும் பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.