கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (செப்.2) வெளியிட்ட செய்தி அறிக்கையில், "கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு 'மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள்' கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த மாதம் 15ஆம் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலும், 18ஆம் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்திலும் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற்றன. இதற்கான, ஆவணங்கள் முறையாக சரிப்பார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இம்முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேரவுள்ளதால், பொறியியல் கல்விபயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்று மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மேலும், வருகின்ற செப்.22 அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, செப்.26 அன்று பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, செப்.29 அன்று ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில், கலை மற்றும் அறிவியல் துறை மாணவ மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன" என அறிவித்து இருந்தார்.