கோவை:கோவையில் நேற்று பெய்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் காய்கறி மார்கெட் முழுவதும் சேரும் சகதியுமாய் ஆனது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் சுமார் 1000 வியாபாரிகள் வியாபாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை எம்ஜிஆர் சந்தையை சூழ்ந்த மழை நீர்! - அவதியடைந்த மக்கள் - தண்ணீர் தேங்கிய எம்ஜிஆர் சந்தை
கோவை எம்ஜிஆர் மார்க்கெட், காந்திபுரம் ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
மேலும் பொதுமக்களும் மார்க்கெட்டிற்குள் நடக்க முடியாத நிலை உள்ளதால் வியாபாரத்திற்காக வைக்கபட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், அரசு போர்கால நடவடிக்கை எடுத்து சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே சமயம் காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பொது சுகாதார அலுவலகம் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் மழை நீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.