நாடு முழுவதும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டின் பல இடங்களில் அசம்பாவிதங்கள் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதி இலியாஸ் அன்வர் தலைமையில், இலங்கையைச் சேர்ந்த ஐந்து தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கொண்ட குழு இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள், கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மாநகரம் முழுவதும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும், துப்பாக்கி ஏந்திய மத்திய கமாண்டோ படையினர் 20 பேர் கொண்ட இரண்டு குழுகள் குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை ரயில் நிலையம் முன்பாக துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் மாநகர காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.