தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Coimbatore school girl suicide: 'உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்' - சசிகலா வேண்டுகோள்

கோவை மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சசிகலா வேண்டுகோள்விடுத்துள்ளார். அஇஅதிமுக பொதுச்செயலாளர் எனக் கையொப்பமிட்டு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Coimbatore school girl suicide
Coimbatore school girl suicide

By

Published : Nov 14, 2021, 7:59 AM IST

Updated : Nov 17, 2021, 1:50 PM IST

கோவை: உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி ஒருவர் சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்றுவந்துள்ளனர். இந்நிலையில் (நவம்பர் 11) வீட்டில் தனியாக இருந்த மாணவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவி தற்கொலை

ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லை

மாணவி முதலில் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலே தற்கொலைக்கு காரணம் என மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இத்துடன் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் மூவரின் பெயர்களை எழுதிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்

பின்னர், முதல்கட்ட விசாரணையில் மாணவி முன்னர் படித்துவந்த தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவி கடும் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.

ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவி தற்கொலை

மேலும் மாணவி தன்னுடைய நண்பரிடம், தொடர்ந்து ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியிருப்பது தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தற்கொலைக்குத் தூண்டுதல்

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து பின்னர் சிறையில் அடைத்தனர். அடுத்த கட்டமாக அந்தத் தனியார் பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவி தற்கொலை


குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “கோவை மாணவியின் மரணம் மனத்தை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவி தற்கொலை

மனவேதனை

மேலும், இந்த விவகாரம் குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவை உக்கடத்தைச் சேர்க்க 17 வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பயம் காரணமாக மனவேதனையடைந்து, தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொறுப்பும் கடமையும்

இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், காவல் துறை நேர்மையாக விசாரித்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி கூடங்களில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.

இதைச் சரியாகக் கடைப்பிடிக்காமல்போனால் மாணவ மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கல்வி கூடங்கள் மட்டுமல்ல பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இது போன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி, அவர்கள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ஆட்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரோ உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும்.

பெண்ணாக பிறந்த அனைவரும்

நம் மாணவச் செல்வங்கள், குறிப்பாக மாணவிகள், பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு, துணிவாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழ வேண்டும். அப்போதுதான் எந்தச் சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

இதுபோன்று தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை, தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஇஅதிமுக பொதுச்செயலாளர் எனக் கையொப்பமிட்டு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்க' - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Last Updated : Nov 17, 2021, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details