கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சியில் பல்வேறு குளங்கள் ஸ்மார்ட் சிட்டி(Smart city) திட்டத்தின் கீழ் சீரமைப்பு செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. இக்குளங்களில் பொதுமக்களுக்காக நடைபாதைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் வைக்கப்பட்டுள்ள I LOVE KOVAI பொதுமக்களின் முக்கிய செல்பி பாயிண்ட் ஆக அமைந்துள்ளது. தினந்தோறும் உக்கடம் பெரிய குளம் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக வரும் ஏராளமான மக்கள் இந்த செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் செய்யப்பட்டு குளக்கரை அழகு படுத்தப்பட்டு வருகிறது. இங்கும் நடைப்பாதைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ள நிலையில் இங்கு 'வணக்கங்க COIMBATORE' என்ற செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டுக்கு கோவை மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பலர், 'வணக்கங்க COIMBATORE' என்பதற்கு பதிலாக கொங்கு தமிழில் குறிப்பிடப்படுவது போல் 'வணக்கமுங்க COIMBATORE' என வைத்திருக்கலாம் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தல' அஜித் போட்டோவை தலையால் வரைந்த ஓவியரின் அசத்தல் வீடியோ!