கோயம்புத்தூர்:தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரங்களில் பெரு நகரமாக உருவெடுத்து வருகிறது. இங்கு உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைய தவிர்த்து மெட்ரோ ரயில் திட்டம் வேறு நகரங்களில் செயல்படுத்தப்படவில்லை.
வளர்ந்து வரும் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை, வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செலவதற்கான ஒரு உந்துகோலாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க அரசு நகர போருந்துக்களின் தரத்தை கூட்டவும் பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் பயணிக்கவும் தமிழக அரசு பேருந்துகளில் சில முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. அரசு நகர பேருந்துகளில் பயணிகளின் நலன் கருதி பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கும் புதிய திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, கோவை மாநகரின் உக்கடம் மற்றும் காந்திபுரம் பகுதிகளில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு நாள்தோறும் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் ஒலிபெருக்கியில் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், கோவை மாநகரில் முதன்முறையாக மாநகர பேருந்தில் இதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காந்திபுரத்தில் இருந்து காரணம் பேட்டை செல்லும் நகர பேருந்து 19c-யில் ஜி.பி.எஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே அறிவிக்கும் முறையை சோதனை முறையில் அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளனர்.