கோயம்புத்தூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவால் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் உண்டானது. அதிலும், திடீரென திருப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தியால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் பரபரப்புக்கு ஆளாகினர்.
ஆனால், இது விபத்து என ரயில்வே காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் பரபரப்பான செய்திகள் பரவியதை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக கோவை, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான வடமாநிலத்தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் தங்களது தொழில்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழிற்சாலை சங்கத்தினர் உள்பட தனியார் நிறுவனத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், இது போன்று வீடியோக்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரும் வடமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, மாவட்ட நிர்வாகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறினர்.
அப்போது பல்வேறு பகுதிகளிலும் இந்தி மொழி தெரிந்தவர்களை வைத்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையும் தொடந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 5) துடியலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் சந்தித்தார்.