கோவை:லோகண்டா என்ற வலைதளம் மூலம் Call Girls and Call Boys என விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஏழு பேரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் மும்பையில் வைத்து இன்று (ஜூன் 11) கைது செய்துள்ளனர். இவர்கள் அந்த வலைதளம் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து விளம்பரம் செய்து Call Boys வேலைக்காக ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடம் ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தியாகு என்பவர் 7 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஏமாந்ததாக கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விசாரணையை துவக்கிய கோவை மாநகர சைபர் கிரைம் (Covai Cyber Crime) போலீசார், சைபர் கிரைம் உதவி ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைத்து மும்பையில் இருந்த அப்சல் ரகுமான்(24), கர்ணன்(24), தமிழரசன்(23), மணிகண்டன்(22), ஜெயசூர்யாபாண்டியன்(25), விக்னேஷ்வீரமணி(25), பிரேம்குமார்(33) ஆகிய ஏழு பேரை மும்பையில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேலும், மோசடிக்கு பயன்படுத்திய 12 வங்கி கணக்குகளையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்தனர். செல்போன் எண்களின் ஐபி முகவரி மற்றும் வங்கியின் KYC விவரங்களை கொண்டு இவர்கள் பிடிப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?