கோவை: மாநகராட்சி விக்டோரியா ஹாலில், மேயர் கல்பனா ஆனந்த குமார் தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், "கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி வருவதை அரசு கண்டு கொள்ளவில்லை. கடந்த 4 மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது. மக்களின் நலனில் அக்கறை இல்லாமல், மாநகர மேயர் கல்பனா செயல்படுவதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று, அதிமுக கவுன்சிலரை பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், திட்டங்களுக்கான ஒப்பந்தம் கோருதல், பாதாளச் சாக்கடை தூர்வாருதல், மாநகராட்சிப் பள்ளிகள் பராமரிப்பு, அண்ணா, எம்ஜிஆர் மார்க்கெட் மற்றும் சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் பராமரிப்புப் பணிகள் உள்பட சுமார் 75 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அது தொடர்பாக உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இந்தக் கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ‘ஆவினில் அதிக தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்’ - அமைச்சர் மனோ தங்கராஜ்!