சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை கோயம்புத்தூர்: 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.
இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் , சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த 5 ஆம் தேதி நடத்த உத்தரவிட்டு, அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டது. அதன்படி நேற்று கோவை குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் 12 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கி 8 மணி நேரம் நடைபெற்று முடிவடைந்தது.
இதில் வேட்பாளர்கள் இருவர் உட்பட, போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் சகுந்தலாவும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை புரிந்த நிலையில் அதன் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டதை தொடர்ந்து பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு தான்; ஏ.சி. சண்முகத்தை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி