கோயம்புத்தூர்: கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அருகில் தனியார் ஹோட்டலில் நேற்று (மார்ச்.9) நடைபெற்றது. இதில் கோவை விமான நிலைய இயக்குநர், செந்தில்வளவன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை காவல் ஆணையர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், அதை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம், விமான நிலைய பயணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் தற்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்பாடுகள் குறித்தும் விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.