கோவை மக்களவைத் தொகுதி, சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணியளவில் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் தொடங்குகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காவல்துறை அலுவலர்களுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோவை தொகுதியில் 5,527 தபால் வாக்குகள் - ஆட்சியர் தகவல் - voting count
கோவை: மக்களவைத் தொகுதியில் இதுவரை 5,527 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராசாமணி, "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு 100 விழுக்காடு ஆயுத்தமாக உள்ளது. ஆறு சட்டப்பேரவை தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பல்லடம் தொகுதிக்கு 30 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமாக வாய்ப்புள்ளது என்றாலும் நிதானமாகவே வாக்குகள் எண்ணப்படும். ஆனால், முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மொத்தமாக 12 ஆயிரம் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும். இதுவரை 5,527 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.