கொடிசியா ராணுவ புத்தாக்க மையம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் கொச்சியிலுள்ள நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு (Naval Ship Repair Yard), கோவை சூலூரில் அமைந்துள்ள 5 பி.ஆர்.டி., இந்திய விமான படை ஆகிய அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது.
கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, ஒரு தொழில் அமைப்பு மூலமாக தொடங்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மையமாகும்.
தென்னக ராணுவத் தளவாட தொழில் வழித்தடத்திற்கு பங்களிப்பை வழங்குவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றி வருகிறது. பிரதமரின் "ஆத்ம நிர்பார் பாரத்" அழைப்பின்படி ராணுவத் தளவாட உற்பத்திப்பொருள்கள் மற்றும் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக இந்த மையம் செயல்பட உள்ளது.
கொடிசியா ராணுவ புத்தாக்க மையம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் தனது செயல்பாடுகளைத் தொடங்கும்விதமாக கொச்சியிலுள்ள நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு (Naval Ship Repair Yard ), கோவை சூலூரில் அமைந்துள்ள 5 பி.ஆர்.டி., இந்திய விமான படை ஆகிய அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி காணொலி வாயிலாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கலையரங்கில் நடைபெற்றது. இந்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் இதற்குத் தலைமை வகித்தார்.
பல்வேறு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்த கொடிசியா ராணுவ புத்தாக்க மையம் இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசுகையில், ''இந்த மையத்தின் மூலமாக ராணுவம், உள்நாட்டுத் தேவைகளை நிறைவுசெய்கின்ற புதிய தொழில் திட்டங்களைக் கொண்டுள்ள புதிய மற்றும் ஏற்கனவே இயங்கிவருகின்ற தொழில்முனைவோருக்கு ஆதரவுதந்து வழிநடத்த முடியும்.
முதல் ஆண்டில் குறைந்தது பத்து தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்விதமாகவும், வரும் காலத்தில் ஆண்டுக்கு ஐந்து தொழில்முனைவோரை உருவாக்கும்விதமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிப்பு சார்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதாக இயங்குவதற்கு ஏதுவாகவும், முப்படைகள், பாதுகாப்புத் துறை சார்ந்த அமைப்புகளின் தேவைகள் குறித்த செய்திகளை பரிமாற்றிக்கொள்ளும் விதமாகவும், ஒற்றைச்சாளர முறை தகவல் மையம் கொடிசியாவில் அமைக்கப்படுகிறது.
இந்த மையத்தின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திலிருந்து நியமிக்கப்படும் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் செயல்படுவார்'' எனத் தெரிவித்தார்.
முப்படைகளுக்கான ராணுவ உதிரிபாகங்களை கொடிசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய்குமார் தொடங்கிவைத்துப் பேசுகையில், ''கொடிசியாவுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தொடங்கிவைப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
உள்நாட்டிலேயே உதிரிபாக உற்பத்தி திட்டத்தை விரிவாக்குவதன் மூலம் செலவினம் குறைவதுடன், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கும் உதவும். ஏற்கனவே கொடிசியாவுடன் இணைந்து ராணுவத்திற்கான ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கியுள்ளோம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் புதிய ஒப்பந்தம் உதவும். பொறியியல் முடித்த மாணவர்கள் அடல் தொழில் வளர்ப்பு மையத்தில் பங்கேற்று புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:காலாவதியான கூடாரமாக தமிழ்நாடு பாஜக உள்ளது - திருமாவளவன்