கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள்பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனைத்தொடர்ந்து, நடக்க இருக்கின்ற மக்களவை தேர்தலில் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும், தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களின் பிரச்சாரக்கூட்டம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருமந்துறையில் அதிமுக சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது,புல்வாமா தாக்குதலில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விரிவாக பேசிய முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறியிருந்தார். புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தும் அந்த தடையை மீறி முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் என்பவர் முதல்வர் பழனிசாமி மீது கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.
இதில், முதல்வர் பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறி நாட்டு மக்களிடையே தவறான எண்ணத்தை திணிக்கிறார். தேர்தல் நேரத்தில் ராணுவ வீரர்கள் பற்றி பேசுவது முறையற்றதாகும். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் இது போன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.