கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் பெண்கள், மாணவிகளை ஒரு கும்பல் ஆபாசமாகக் காணொலி எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து பணம், நகை பறிப்பதாக 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் பொள்ளாச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, ஹேரேன் பால், அருண்குமார் என இதுவரை ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீது எட்டு பெண்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. வழக்கு விசாரணையின்போது ஒன்பது பேரும் பலத்த காவல் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துவரப்பட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னால் முன்னிறுத்தப்பட்டனர்.
அப்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. வழக்கு விசாரணை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்புடன் சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்திருந்தது. இந்த நகல்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள்