கோயம்புத்தூர்:தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் 13ஆவது ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி கோவை கொடிசியாவில் இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்து பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜவுளி ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்தது. நடப்பாண்டும் குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
உள்நாட்டு ஜவுளி உற்பத்தியை வரும் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதேபோல, அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதியை 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஜவுளித்துறையில் முதலீடு அதிகரிக்கும். பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்கா அமைக்க பல மாநிலங்கள் விண்ணப்பித்துள்ளன.
தமிழ்நாட்டில் விருதுநகரில் இந்த பூங்கா அமைக்க விண்ணப்பம் வந்துள்ளது. எங்கெல்லாம் தேவை இருந்து, கட்டமைப்புக்காக குறைந்த விலையில் நிலம் மற்றும் கட்டுபடியான விலையில் 24 மணி நேர மின்சாரம் வழங்கி ஆதரவளிக்கும் மாநிலங்களில் பூங்கா அமைப்பதற்காக ஊக்குவிப்பை மத்திய அரசு வழங்கும். உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், இங்கிருந்து பொருட்களை வாங்கவும் ஆர்வமாக உள்ளன.
எனவே, வெளிநாட்டு சந்தைவாய்ப்புகள், ஏற்றுமதியில் போட்டியிட உதவும் வகையில் ஏற்கெனவே ஐக்கிய அரபு நாடுகள் , ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீளமேட்டில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் வசதியை பார்வையிட்டேன்.
நாட்டில் உள்ள அனைத்து இளம் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்களை மத்திய அரசின் மக்கள் மருந்ததங்கள் மூலம் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிட்ராவில் உள்ள இயந்திரங்கள் மூலம் தமிழகத்துக்கு தேவையான நாப்கின்களை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் இணைந்து, அனைத்துவித ஜவுளிப் பொருட்களையும் சோதனையிட 25 கோடி ரூபாயில் சிட்ராவில் நவீன பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும்.
இதன்மூலம் ஜவுளி பொருள்களை சோதனையிட வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான பஞ்சாலைகளை லாபத்தில் இயக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறோம். தற்போதைய நிலையில் அவை லாபகரமாக இயங்கவில்லை. தேசிய பஞ்சாலைகழகத்துக்கு சொந்தமான சொத்துகளை தனியாருடன் இணைந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:உங்கள் வளர்ச்சியை கண்டு பெருமைப்படும் ஒரு தந்தையாக நான் இருப்பேன்... முதலமைச்சர் உருக்கம்...