பாண்டிச்சேரியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக சனிக்கிழமை இரவு, கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளனர். இதில், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று, பாண்டிச்சேரியில் வசித்து வந்த அருள்தாஸ் என்பவரும் இவர்களுடன் வந்திருந்தார்.
வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற பிரான்ஸ் குடியிருப்பு வாசி உயிரிழப்பு!
கோவை: பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர் பூண்டி வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், பூண்டி மலைக்கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்வதற்காக அருள்தாஸும் அவரது குழுவினரும் புறப்பட்டனர். அன்று இரவு நான்கு மலைகளைக் கடந்து 5வது மலைக்கு ஏறும் பொழுது அருள்தாஸுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு மற்றவர்கள் அவரை எழுப்ப முயன்றனர், ஆனால் மூச்சுத்திணறல் அதிகமாகி அவர் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து, ஆலந்துறை காவல்துறையினர், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மலைவாழ் மக்களின் உதவியோடு அருள்தாஸின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்பு, ஆலந்துறை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.