கருமத்தம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி. இவர் லாரி ஓட்டுனராக உள்ளார். அவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 17 வயதில் சரோன் ரிச்சா என்ற மகள் உள்ளார். இவர் காடுவெட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாணவி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை, இதனால் கடந்த இரண்டு நாட்களாக மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி, மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மதியம் வீட்டிற்கு வந்த அவரது தாய் சாந்தி மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்து மாணவியை மீட்டு பரிசோதித்து பார்த்தனர். அப்போது மாணவி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.