முன்பெல்லாம் ஆடைகளை வாங்குவதென்பது பெரும்பாலான குடும்பங்களில் ஏதேனும் விழாக்காலங்களில் மட்டும்தான் சாத்தியப்படும். முந்தைய தலைமுறையில் ஆண்டுக்கு ஒருமுறைதான் புத்தாடைகள் கைக்கு கிடைக்கும். ஆனால், காலப்போக்கில் அது மூன்று பருவங்களாக மாறியது. திருவிழா, பிறந்தநாள், திருமணம் என்பதே அந்த புதுத்துணிகள் காலம். அதுவே, தற்போது தேவைக்கேற்ப இல்லாமல் ஆசைக்கு ஏற்ப மாறிப் போனது.
முன்பெல்லாம், திருமணத்திற்கு மாப்பிளையை விட மணப்பெண்ணின் ஆடைக்குத்தான் அதிக கவனம் செலுத்துவார்கள். திருமண செலவில் பெண்ணுக்கு மட்டும் ஆடை, அலங்காரப் பொருள்கள் என்று ஒரு லிஸ்டே நீளும். இதற்காக பாரம்பரியமான கடைகளுக்குச் செல்வது மணிக்கணக்கில் புடவைகளைத் தேர்ந்தெடுப்பது என அதிக மெனக்கெடல்கள் இருக்கும்.
பெரும்பாலான திரைப்படங்களில் புடவை எடுக்கும் டாபிக்கை அடிப்படையாகக் கொண்டு ஒரு நகைச்சுவைக் காட்சியே இடம்பெறும். ஆனால் தற்போது, காலம் மாறிப் போனது. பெண் மட்டுமல்ல, ஆண்களும் தங்களின் ஆடைகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். திருமணம் என்ற பேச்சு ஆரம்பிக்கும் போதே தனக்கான ஆடை வடிவமைப்பாளர்களை இத்தலைமுறையினர் முடிவு செய்துவிடுகின்றனர்.
இதற்கெனவே, நகர்புறங்களில் பொடிக்ஸ் என்னும் துணிக் கடைகள் அமைந்துள்ளன. இதனால் திருமண ஆடைகளுக்கான அலைச்சல் குறைந்துள்ளது. இந்த கடைகளில் மணப்பெண், மணமகன் தொடங்கி அவர்கள் வீட்டு சுட்டீஸ் வரை அனைவருக்கும் விருப்பப்படி ஆடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம். இங்கு ஆடை, ஆடைக்கு தகுந்தாற்போல் அணிகலன்கள் என அனைத்தும் பிரத்யேகமாகவும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போலவும் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.
பெரும்பாலும் தனித்துவமான இதன் வடிவமைப்புகளுக்கு விலை சற்று அதிகம். இதன் வணிகம் உயர் வர்க்கத்தினரிடையேதான் நிகழ்ந்து வருகிறது. இது போன்ற துணிக் கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் அங்கிருக்கும் துணிகளைத் தேர்ந்தெடுத்து வடிவமைக்கச் சொல்லும் டிசைனுக்கு ஏற்றார் போல விலை நிர்ணயிக்கப்படுகிறது.
திருமணம் தான் இக் கடைகளின் மிக முக்கியமான வணிகத்திற்கு ஆதாரம். இந்நிலையில், கரோனா நெருக்கடி இந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. தள்ளிப் போன திருமணங்கள், களையிழந்த திருவிழாக்கள் என புத்தாடைகளுக்கு அவசியமில்லாமல் போனது. பொட்டிக்ஸ் தற்போது எப்படி இயங்குகின்றன? அதன் வியாபாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆடை வடிவமைப்பாளரும் கோவையின் ஸ்டூடியோஸ் ஏ பொட்டிக்ஸின் உரிமையாளருமான அபர்ணாவிடம் பேசினோம்.
“கரோனாவிற்கு முன் வியாபாரம் செய்ய ரொம்பவே சுலபமாகயிருந்தது. துணிகளை வடிவமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வருவதில் சிக்கல் இல்லை. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கரோனா அச்சத்தில் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்வுகளினால் வரும் ஆர்டர் குறைந்துள்ளது”என்றார்.
கரோனா நெருக்கடியினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பொட்டிக்ஸ் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்கு வரும் ஆர்டர்களின் விதம் முற்றிலும் மாறியுள்ளதாகவே அபர்ணா தெரிவித்தார்.