கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நேற்று திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை மற்றும் உறவினர்களின் பெயர்களை வைத்து அரசியலுக்கு வந்தவர்களே மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த மகளிர் உரிமை மாநாடு ஒரு நாடகம்.
இந்நிலையில், எந்த வித பின்னணியும் இல்லாமல் தடைகளை உடைத்து, அரசியலுக்கு வரும் சாதாரண பெண்மணிகளுக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள 33 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு தகுதி இல்லை. மேலும், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட, திமுகவை வளர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.
மேலும், திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று திமுக பகுதி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில், இவர்கள் மகளிர் உரிமை மாநாட்டை நடத்துகின்றனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பத்திரிகையாளர்கள் யாரையும் நான் புண்படுத்தவில்லை. போலி பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை என்னை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கடுமையாக கேள்வி கேட்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கடுமையாக பதில் சொல்கிறேன். நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன். போலி பத்திரிக்கையாளர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் என்றும் கண்டு கொள்ளமாட்டேன்” என்றார்.
இதனையடுத்து, “பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் கட்சியை வலிமைப்படுத்தவே மாநிலம் முழுவதும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர். எனவே, அவர்களை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டியது, ஒரு எதிர்கட்சியின் கடமை என்பதால் அதைத்தான் பாஜக செய்கிறது” என்றார்.