கோயம்புத்தூர்:விஸ்வகர்மா சமூதாய மக்கள் பயன்பெறும் வகையில் 'விஸ்வகர்மா யோஜனா' என்னும் திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அமல்படுத்தப்படும் என சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இத்திட்டம் விஸ்வகர்மா சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்க கூட்டமைப்பின் தலைவரான பாபுஜி சுவாமிகளை, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அவரது மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் இன்று (அக்.06) சந்தித்தார்.
பின்னர், ஏ.பி.முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “தேசிய தலைமை இது குறித்து முடிவு செய்யும். நாங்கள் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாட்டில், ஆட்சி செய்யும் திமுக, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை. அதனை திசை திருப்புவதற்காக சனாதனம் போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது” என்றார்.