செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கோயம்புத்தூர்:கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் வாங்கப்பட்ட டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு, புதிய டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை பயன்பாட்டுக்காக வழங்கினார். தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆசிரியர்களின் சம்பளத்தை கூட பெற்றோர்கள் சங்கம் வாயிலாக தொகுத்து வழங்குவது பெரும் பிரச்னையாக உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்விகற்கும் மாணவர்களை ஒரே வகுப்பில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர்.
ஒருபுறம் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என சொல்லுகிறோம். ஆனால், ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை அரசாங்க பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது. ஆசிரியர் தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, கல்வித் துறை அமைச்சர் பள்ளிகளுக்குத் தேவையான விஷயங்களை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் ஜி 20 மாநாடு சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்து இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லவில்லை. மற்ற மாநிலங்களில் ஜி 20 மாநாடு சிறப்பாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் முக்கியமான ஜி20 நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இது பாஜக அரசின் நிகழ்ச்சி அல்ல. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை கொடுக்கக்கூடிய நிகழ்வு. ஜி 20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்று பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு இதற்கு முக்கியத்துவம் அளித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவினர் கைது நடவடிக்கை, என்பது சிறிய நபர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்தாலும் விமர்சனங்களை முன் வைத்தாலும் கைது செய்வது, இந்த அரசாங்கம் தங்களை பலம் இல்லாதவர்களாக கருதுகிறார்கள் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடியையும் மத்திய அரசை பற்றியும் மோசமான கருத்து தெரிவிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
முதலமைச்சர் ஸ்டாலினின் பீகார் பயணம் குறித்து பேசிய அவர், திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது ஸ்டாலின் பீகார் செல்லும்போது #GoBackஸ்டாலின் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. பிஹார் மக்கள் குறித்து தவறாக சித்தரித்ததனால் இது திருப்பி கிடைக்கிறது" என்றார்.
தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் அரசியலுக்கு வந்தார் என்றால் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஏனென்றால் இளைஞர்கள் அதிகமாக அரசியலில் பங்குபெறும் போது ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும். எனவே நடிகர் விஜய்யும் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் விஜய் மட்டுமல்ல எந்த நடிகரையும் வரவேற்கிறோம்.
இப்படி வரும்போது மக்களுக்கு எப்படி வேலை செய்கிறார்கள், மக்களுடைய பிரச்னைகளை எப்படி பேசுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன்பு வந்த ஒரு நடிகர் அடுத்த முதலமைச்சர் நான்தான் எனக் கூறினார். படப்பிடிப்பு போல அரசியலை நினைத்துக் கொள்கின்றனர். அது அரசியல் கிடையாது. வாழ்க்கையை கொடுப்பதுதான் அரசியல். நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு, “அங்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இரு தரப்பினரிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கி, இரு பிரிவுகளுக்குள்ளும் நம்பிக்கையின்மை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். கலவரத்தை கட்டுக்குள் வைக்க அமைதி குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:விஜய் அறிவுத்தல்படி இரவுநேர பாடசாலைத் திட்டம் - விஜய் பிறந்தநாளில் அறிவிப்பு!