கோயம்புத்தூர்:பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, "பாரதம் விடுதலை அடைந்த தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மக்கள் நினைவிலிருந்து அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. மகாத்மா காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் ஜாதி சங்கத் தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்" என்று பேசியுள்ளார்.
இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். ஆளுநர் மீதான திமுகவின் விமர்சனத்திற்கு ஆளுநர்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக கட்சியோடு தொடர்புப்படுத்தி, பாஜக தலைவர் போல செயல்படுகிறார் என, டி.ஆர்.பாலு அறிக்கை விட்டிருப்பதால் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.
"ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ, பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதியாக, மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்" என டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். 1991 முதல் 1996 வரை செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி எப்படி செயல்பட்டார்.
அவருக்கு திமுக எப்படி ஆதரவளித்தது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநருக்கு ஆதரவாக செயல்பட்டு, மாநில அரசுக்கு இடையூறுகள் செய்வதும், ஆட்சிக்கு வந்தால், 'ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் பதவி எதற்கு?' என கேள்வி கேட்பதும் திமுக வழக்கமாக போடும் இரட்டை வேடம்தான். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று ஆளுநர் விமர்சித்திருக்கிறார்.
கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும்" என டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். மதம்மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்தான் திமுகவின் கொள்கை ஆசான்.