கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து இருந்து மூன்று நாள்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்கும் மக்கள் ஆசீர்வாத வேண்டி யாத்திரை நடைபெறுகிறது. முதல் நாள் யாத்திரை கோயம்புத்துரில் நடக்கிறது. அங்கிருந்து திருப்பூர் வழியாக இரண்டாம் ஈரோடு மாவட்டத்திலும், மூன்றாவது நாள் சேலம் நாமக்கல் பகுதிகளில் யாத்திரை செல்கிறது. இந்த யாத்திரையில் மக்களிடம் ஆசீர்வாதங்களை எல்.முருகன் பெறுகிறார்.
இடைவெளியை குறைக்க யாத்திரை
சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது பாஜக கட்சியால் கண்டெடுக்கப்பட்டு பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இதுதான் உண்மையான சமூகநீதி. மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சருக்கும் மக்களுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது என பாஜக விரும்புகிறது. பொதுமக்கள் அவர்களது பிரச்னைகளை அமைச்சருக்கு போன் செய்து சொல்லும் வகையில் இருக்க வேண்டும். அதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி வெளி அரங்கு நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். தளர்வுகளுக்குப் பின்பு மக்கள் சந்திப்பு இருக்கும்.
திமுக அரசு தற்போது 100 நாளை நிறைவு செய்துள்ளது. இந்த 100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்தார்கள் எனச் சொல்வதை விட என்ன செய்திருக்கலாம் என சொல்லாம். தேர்தல் வாக்குறுதியை இன்னும் அதிகமாக நிறைவேற்றி இருக்கலாம். நல்ல ஆட்சியாளர்களை, அலுவலர்களை கொண்டு வந்துள்ளார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து இரண்டாவது அலையை கட்டுப் படுத்தி உள்ளார்கள்.
மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல செல்ல மக்களுக்கு பயன்கள் கிடைக்கும். பாஜக எதிர்க்கட்சிதான் ஆனால் எதிரி கட்சி அல்ல என்று நாங்கள் பலமுறை கூறியிருக்கிறோம்.
இந்த 100 நாட்களில் திமுக அரசு ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை தட்டிக் கேட்டுள்ளோம். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்து உள்ளது மக்களுக்கு நல்லது அதில் மாற்றுக்கருத்து கிடையாது அதேசமயம் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது.