கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோயில்களின் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி வைத்தார். காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள மதுரைவீரன் கோயிலில் இத்திட்டத்தை துவக்கி வைத்த அவர் முதற்கட்டமாக சுமார் 20 கோயில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணெயினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், ” கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோயில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணெய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோயில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியிலுள்ள 20 கோயில்களுக்கு மாதம்தோறும் தீப எண்ணெய் வழங்குவது உட்பட கோயில் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்வது எனத் தீர்மானித்துள்ளோம்.
கோயிலில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களைப் பெற்றுத் தரும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஊரிலும் கல்விச்சாலையைப் போல் கோயில்களும் முக்கியம். நிறைய இடங்களில் கோயில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில் பூஜை முறைகளிலிருந்து விலகி செல்வதால், அவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் கோயில்களில் விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இப்பணியைத் துவங்கியுள்ளோம்.