பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப்புகாரில் இரு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்காக "தேடல் குழு" உருவாக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியான வரைமுறைகள் குறித்து தேடல் குழு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டது.
துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 147 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து 10 பேரை தேடல் குழு தேர்வு செய்துள்ளது. இந்த 10 பேரில் இறுதிப் பட்டியலுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பட்டியல் அனுப்பப்படும். அவர்களில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் தேர்வு செய்வார்.
இந்நிலையில் தேடல் குழு தேர்வு செய்துள்ள 10 பேர் கொண்ட பட்டியலில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், இதில் தகுதியற்ற நபர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். தேடல் குழுவைக் கலைக்க வேண்டுமெனவும் புதிய தேடல் குழு உருவாக்கப்பட்டு தகுதியான நபர்களை துணைவேந்தர் பதவிக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பேராசிரியர்கள் பூபதி, கணேசன், பாலச்சந்திரன், சுரேஷ் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.