கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, அதனால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின் ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கும் வேதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளை முதன்முதலில் விளையாடும் மக்களின் மனதில் விளையாடும் ஆர்வத்தைத் தூண்டி, அதில் அவர்களைத் தொடர்ந்து ஈடுபட வைப்பதற்காக ஆன்லைன் விளையாட்டை வழங்கும் நிறுவனங்கள் சில தந்திரங்களை கையாளுகின்றன. முக்கியமாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சைக்காலஜி நிபுணர்களை பணியமர்த்தி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் கணினியில் தரவுகளை சேகரிக்கின்றன.
கலர் சைக்காலஜி: இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவர்களுடன் மென்பொருள்கள் மூலம் கணினி விளையாடுகிறது. இதற்குப் பெரிதும் உதவியாக கூகுளில் பயன்படுத்தும் ‘கீ வேர்டஸ்’ உதவியாக உள்ளது. இந்த வகையான கீ வேர்டஸ், ஒருவர் இப்படித்தான் இருப்பார் என்னும் அனுமானத்தை உண்டாக்குகிறது.
அதேபோல கலர் சைக்காலஜி பயன்படுத்தியும் ஒருவரின் மனநிலையை அறிந்து கொள்கிறார்கள். முதலில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது போல் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் அந்த விளையாட்டுக்கு அடிமையான நிலைக்கு செல்லும்போது, அவர்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பார்கள்.
விட்டதைப் பிடிக்கும் மனோபாவத்துடன் தொடர்ந்து விளையாடுபவர்கள், தங்கள் பணத்தை இழந்த பின்னர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் விளையாடுவர். மொத்தமாக இழந்த பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாகி வேறு வழியின்றி தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.