தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" : ட்ரெண்டாகும் பாகுபலி யானையின் கியூட் வீடியோ! - bahubali elephant cute video

Bahubali elephant fights with toy elephant: பொம்மை யானையுடன் சண்டையிடும் பாகுபலி யானையின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது.

பொம்மை யானையுடன் சண்டையிடும் பாகுபலி யானை
பொம்மை யானையுடன் சண்டையிடும் பாகுபலி யானை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:34 PM IST

பொம்மை யானையுடன் சண்டையிடும் பாகுபலி யானை

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு மாதங்களுக்கு பின்னர், பாகுபலி என மக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அண்மையில் இருந்து வருகிறது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் தற்போது பாகுபலி யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்த பாகுபலி யானை பொதுமக்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கக்கூட இல்லை. இருந்தாலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை மட்டுமே தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே பயிர்களை சேதப்படுத்தி வந்த பாகுபலி யானையை விரட்ட பொது மக்கள் நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தினர். அதனால் வாயில் காயம் ஏற்பட்ட பாகுபலி யானையை பிடித்து சிகிச்சை அளித்து, வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதனையடுத்து பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் கடந்த மாதம் முழுவதும் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், பாகுபலி யானையை வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், இரு மாதம் கழித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வர தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலை மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளிய பாகுபலி யானை, கல்லூரி வளாகத்தில் ஒய்யாரமாக நடந்து சென்றது. பின்னர், அங்குமிங்கும் உலாவிய பாகுபலி யானை, யானை உருவம் பொறிக்கப்பட்ட சிலையினையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வனக்கல்லூரியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் அச்சமடைந்தனர்.

பாகுபலி யானை வனக்கல்லூரியில் நுழைந்த தகவல் அறிந்து, விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுவரை பாகுபலி யானை மனிதர்களை ஏதும் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அதன் குணம் மெல்ல மெல்ல மாறி வருவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே பாகுபலி யானை பொம்மை யானையுடன் சண்டையிட்டு, அதனை கீழே தள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், "வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் பாகுபலி யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க இரு மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது யானைக்கு ஏற்பட்ட காயம் குறைந்து உள்ளதால், அதனை வனப்பகுதியிலேயே கண்காணிக்க முடிவு செய்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக இந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பொருட்சேதம் அதிகமாக ஏற்படுவதால், இதனை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தவிர பாகுபலி யானை விவசாய நிலங்களில் போடப்பட்டுள்ள மின் வேலிகளுக்குள் எளிதாக புகுந்து வருவதால், அதன் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் விரைந்து யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும்" என கோரிக்கை முடித்துள்ளனர்.

இதையும் படிங்க:சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details