கோயம்புத்தூர்:உணவு, நீர் ஆகிய தேவைகளுக்காக மேட்டுப்பாளையம் பகுதியில் 'பாகுபலி' என்னும் ஆண் காட்டு யானை வெகுநாட்களாக சுற்றித்திரிகிறது.
யானையைப் பிடிக்கத் திட்டம்
இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், அதனைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்த கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ. அன்வர்தீன் உத்தரவிட்டார். அதன்பேரில் வனத்துறையினர், பாகுபலி யானையைப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
அதற்கு உதவியாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வந்துள்ளன.
சிக்காத பாகுபலி யானை
பாகுபலி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய 6 பேர் அடங்கிய வனத்துறையினர் 7 குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதன் நடமாட்டத்தைக் கண்டறியமுடியவில்லை.
அந்த யானை தற்போது, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சிறுமுகை வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார், அரசு வன கால்நடை அலுவலர்கள் சுகுமார், அசோகம், ராஜேஷ் ஆகியோர் நேற்று (ஜூன்.26) மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு வளாகத்துக்கு வந்தனர்.