திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் கோயம்புத்தூர்: மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்த் குமார் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (டிச. 29) நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு பங்கேற்க வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ் மற்றும் பிரபாகரன் இருவரும் விக்டோரியா ஹாலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளலூர் குப்பை கிடங்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் மேயர் கல்பனா ஆனந்த் குமார் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த முறைகேட்டிற்கு திமுக கவுன்சிலர்களும் உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் இது குறித்து மேயரிடம் கேள்வி எழுப்பிய போது திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு வாதத்தை முன் வைத்ததால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. மேலும் இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலரும் மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு 'இது திமுக ஆட்சி நீங்கள் உத்தரவிட வேண்டாம்' என அதிமுக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கவுன்சிலர்கள், கடந்த வாரங்களில் திமுக மேயர் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்ததில் திமுக துணை மேயர், திமுக கவுன்சிலர்கள் கார்த்திகேயன், அஸ்லம்பாஷா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேயர் கல்பனாவிடம் அதிகாரிகள் தெரிவித்ததை வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் மேயர் பரப்பினார்.
ஆனால் இந்த சம்பவம் நடைபெற்று 20 நாட்களை கடந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் மேயரும் உடன்படுகையில் ஈடுபட்டுவிட்டதாக தெரிகிறது என குற்றம் சாட்டினர். இதனால் கோவை மாநகராட்சிக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும், கோவை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்குள் யார் அதிகமாக சம்பாதிப்பது என்ற போட்டி நிலவுவதாகவும், மக்களை பற்றிய அக்கறை திமுக கவுன்சிலர்களுக்கு இல்லை என குற்றம் சாட்டினர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் கூலியை உயர்த்தி 648 ரூபாயாக வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும் தற்பொழுது கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாமன்ற கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கால நீட்டிப்பு