மதுரையை பூர்விகமாக கொண்டவர்கள் மாணிக்கம், பாண்டியம்மாள் தம்பதி, தற்போது அந்தமானில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் சித்தாரா கோவையில் பட்ட படிப்பு முடித்துவிட்டு தனியார் வங்கியில் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மிதுன் என்பவர் அறிமுகமாகி நண்பர்களாக பழகிய நிலையில் இருவரும் காதலித்துள்ளனர். இது குறித்து இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவந்த போது, சித்தாராவின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாத நிலையில் மிதுனின் பெற்றோரான ராஜா, ராதிகா தம்பதி திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து மணமகன் மிதுன் கூறுகையில், "முதன்முதலில் கோவையில் இருவரும் சந்தித்தோம். வங்கியில் 2015 ஆம் ஆண்டு பணிபுரிந்தபோது அறிமுகமாகிய நிலையில், இருவரும் காதலித்து வந்தோம். தங்களுடைய காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறியபோது என்னுடைய வீட்டில் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். சடங்குகள் சம்பிரதாயத்தில் தனக்கு நம்பிக்கையில்லை. அதேபோல், புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லி திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. இதனால், எளிமையான முறையில் தந்தை பெரியார் சிலை முன்பு சாதிமறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது மன திருப்தியை அளிக்கிறது" என்றார்.
பெரியார் வழியில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம்
சுயமரியாதை திருமணம் செய்தது குறித்து சித்தாரா கூறுகையில், "பெரியாரை படிக்க ஆரம்பித்த பின்னர் பெரியார் கூறிய முறையில் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தோம். சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சாதிய கட்டமைப்பு என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மனிதநேயத்தை பாதிக்கும் சாதி தேவையில்லை. மனிதநேயம் தான் முக்கியம். சிறுவயதில் சாதியக் கட்டமைப்புக்குள் இருந்த நிலையில், பெரியாரை படித்த பின்னர் மனிதநேயம் எவ்வளவு முக்கியமானது என்பது தெரிந்தது.
அந்தமானில் பிறந்து வளர்ந்தாலும் கோவையில் இருக்கும் போது தான் பெரியார் குறித்து படிக்க ஆரம்பித்தேன். அவருடைய கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது. ஆண் பெண் சமூகத்தில் சமம் என்பது தெரியவந்தது. இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தோன்றியதால் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆண்- பெண் என்ற வேறுபாடு இல்லாமல் சம உரிமை என்பது எல்லா உறவுகளுக்கும் இருக்க வேண்டும்.
இதை என்னுடைய அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். சாதி மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. முக்கியமாக பெண்கள் மத்தியில் சாதி திணிக்கப்படுகிறது. இதனை பெண்கள் முறியடித்து வெளியே வந்தால் தான் முன்னேற்றம் அடைய முடியும். பெண்கள் படித்து முன்னேறும் போது தான் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகரிக்கும். பெண்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். கிராமத்தில் உள்ள பெண்கள் சமூக கட்டமைப்பில் இருந்து வெளியே வரும்போது சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்கும்" எனக் கூறினார்.
சாதி மறுப்பு சுய மரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில், அந்தமான் பொண்ணும், கோவை பையனும் பெரியாரின் வழியில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.
இதையும் படிங்க:ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த தம்பதி! சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் மிரட்டல்!