கோவையில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.. நடந்தது என்ன? கோயம்புத்தூர்: கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். இன்று (செப்.3) முதலில் ஸ்வச் பாரத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் குழந்தைகளுடன் சந்திரயான் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
பின்னர், கொடிசியா வளாகத்தில் நடைபெறும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், அதிமுக கோவை எம்எல்ஏக்கள் அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர்.
பின் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சருடன் கலந்து கொண்டு உள்ளனர். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.
அதிமுக பா.ஜ.க கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்த நிலையில், இந்த அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு பேசும் பொருளாக மாறி இருந்தது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அறிக்கையை ஏற்கனவே அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (அக்.3) பாஜக மாநில கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் தொடருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை இனி பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அண்ணாமலை இல்லாமல் நடைபெறும் பாஜக மாநில ஆலோசனைக் கூட்டம்!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, சென்ற மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரைச் சந்தித்திருந்தோம். அந்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காகவே வந்திருந்தோம்.
தென்னை விவசாயிகள் தொடர்பான மனுவைக் கொடுத்து நிதி அமைச்சரைச் சந்தித்தோம். வேறு எந்த அரசியல் காரணங்களும் கிடையாது. மாநில அரசிடம் பலமுறை கடிதம் மூலமாக வலியுறுத்தினோம். அதனைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசிடம் வலியுறுத்துவதன் ஒரு பகுதியாக இங்கு வந்திருக்கிறோம்.
இந்த சந்திப்பில் கூட்டணி குறித்துப் பேசவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை மட்டுமே பேசப்பட்டது. கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தான் முடிவு எடுப்பார். நாங்கள் அது தொடர்பாக வரவில்லை. விவசாயிகள் பிரச்சனைக்காகவே வந்துள்ளோம். இது அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது. கூட்டணிக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தம் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காகவே வந்திருந்தோம். அரசியல் காரண காரியங்கள் எதுவுமே கிடையாது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை யாரோடும் ஒப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!